காஞ்சியில் பாதாள சாக்கடையில் சேலை,கட்டட கழிவுகளால் அதிருப்தி

காஞ்சியில் பாதாள சாக்கடையில் சேலை,கட்டட கழிவுகளால் அதிருப்தி
X
பாதாள சாக்கடையில் சேலை, கட்டட கழிவுகளால்... அதிருப்தி:அடைப்பை நீக்க முடியாமல் மாநகராட்சி தவிப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் 51 வார்டுகளில், 1,008 தெருக்கள் உள்ளன. இதில், 40 வார்டுகளில், 1978ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. 21,000 வீடுகளில் கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. வீடுகளில் சேகரமாகும் கழிவுநீரை, நத்தப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி அனுப்ப, நகர் முழுதும் நான்கு உந்து நிலையங்களும், ஆறு, கழிவு நீரேற்று நிலையங்களும் இயங்கி வருகின்றன. தனியார் நிறுவனம் வாயிலாக பாதாள சாக்கடை கழிவுநீர் திட்டம், மேலாண்மை செய்யப்படுகிறது. இதற்காக, ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேலாக மாநகராட்சி நிர்வாகம் செலவிடுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டும், பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர மேற்கொள்ள முடியவில்லை என, மாநகராட்சி நிர்வாகம் மீது, நகர மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமாக இருப்பவை, பாதாள சாக்கடையில் சட்ட விரோத இணைப்புகள் கொடுப்பது, குழாய்களில் கழிவுகளை வீசுவது.தவிர, 40 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாயில், கொள்ளளவைவிட மூன்று மடங்கு கழிவுநீர் செல்வதாலும், சிறிய தொழில் நிறுவனங்கள் சட்ட விரோத இணைப்புகள் மூலம் கழிவுநீரை வெளியேற்றுவதாலும், குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, சேலை, துணி, செங்கல் மற்றும் கட்டட கழிவுகள் உள்ளிட்ட அடைப்பு ஏற்படுத்தக்கூடிய திடப்பொருட்களை வீசுவதால், குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறி, மாநகராட்சி முழுதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
Next Story