மனு அளிக்க அனுமதி மறுப்பு - ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டம்.
மனு அளிக்க அனுமதி மறுப்பு - ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டம். கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருபவர் சக்திவேல். கரூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தோகைமலை , நங்கவரம்,நச்சலூர் , சூரியனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியரின் வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை , இலவச வீட்டு மனை பட்டா , கலைஞரின் கனவு இல்லம் போன்ற திட்டங்களில் பயனடைய வேண்டி கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளிக்க வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு பணியில் இருந்த காவலர்கள் ஒட்டுமொத்தமாக அனைவரையும் மனு அளிக்க அனுமதிக்க முடியாது என மறுத்தனர். இதனால் பல்வேறு கிராம பகுதியில் இருந்து வந்து மனுக்கள் அளிக்க முடியாமல் போனால் என்ன செய்வது என கருதிய சக்திவேல் ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Next Story





