திமுகவை நோக்கி ஓபிஎஸ் செல்வது துரோகம்: தமிழிசை விமர்சனம்

X
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை கூறியதாவது, தினம் தினம் போராட்டமாக இருக்கிறது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படி போராடும் அளவுக்கு மத்திய அரசு என்ன அநீதியை இழைக்கிறது. உண்மையில், வாழ்க்கையை நடத்துவதற்கும், பாதுகாப்புக்கும், மருத்துவமனை செல்வதற்கும் தமிழக மக்களுக்குதான் தினம் தினம் போராட்டமாக இருக்கிறது. மருத்துவமனைகளின் அவலநிலை அனைத்து ஊடகங்களிலும் வெளிவருகிறது. மக்களுக்கு மத்திய அரசு தினம் தினம் உதவிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இங்கு இருப்பவர்கள் மக்களை பற்றி கவலைப்படுவது இல்லை. எப்போதும் மத்திய அரசை குறை கூறி கடிதம் எழுதுவதே முதல்வருக்கு வழக்கமாகிவிட்டது. இன்று கருணாநிதி இருந்திருந்தால், தமிழக நலனுக்காக மத்திய அரசை ஆதரித்திருப்பார். தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிப்பது நல்லதல்ல என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களால் 57 சதவீத மக்கள் பயன் பெற்றுள்ளனர். வறுமைக்கோட்டில் இருந்து 50 கோடி பேர் மேலே வந்துள்ளனர். ஓபிஎஸ்-க்கு ஏதாவது கருத்து இருந்தால், வெளிப்படையாக சொல்லலாம். ஆனால், பாஜக தலைவரை குற்றம் சொல்வதை ஏற்க மாட்டோம். அவர் தனது அரசியல் நகர்வை இன்னும் நிதானமாக மேற்கொண்டிருக்கலாம். பாஜகவை குற்றம்சாட்டி திமுகவை நோக்கி போவதுதான், அதிமுக தலைவர்களுக்கு இவர்கள் செலுத்தும் அஞ்சலியா, வாழ்நாள் முழுவதும் எதிர்த்து அரசியல் செய்த கட்சியை போய் பார்த்து, அந்த கட்சியில் சேர்கின்றனர். உடல்நலம் விசாரிப்பது பற்றி நான் எதுவும் கூறவில்லை. ஆனால், அதை வைத்து திமுகவை ஈர்ப்பு சக்தியாக பயன்படுத்திக் கொள்வது என்ன வகையான அரசியல். இதை துரோகத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன் என அவர் கூறினார்.
Next Story

