புனித பரலோக மாதா பெருவிழா: நாளை தொடங்குகிறது

X
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா பசிலிக்கா திருத்தலம் உள்ளது. இந்த ஆலயத்தில் விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம் நாளை(புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மாலை 6 மணியளவில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்துஆனந்தம் தலைமையில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு திருப்பலி நடக்கிறது. வருகிற 9-ஆம் தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடும், 10-ஆம் தேதி காலை 8.30 மணியளவில் புதுநன்மை விழாவும், 14-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான விண்ணேற்பு பெருவிழா வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 2 மணியளவில் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமையில் தேரடி திருப்பலி நடைபெறுகிறது. காலை 6 மணி, 8 மணி, 10 மணியளவில் பங்குத்தந்தையர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. மேலும் கேரளா, மும்பை, உள்ளிட்ட பல வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக அன்று மதியம் 12 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், பிற்பகல் 2 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், மாலை 4 மணியளவில் இந்தியில் திருப்பலியும், இரவு 7 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, செவல்பட்டி, குருவிநத்தம் கிராமங்களை சேர்ந்த இறைமக்கள் மற்றும் ஆலய பங்குத்தந்தை மோயீசன், உதவி பங்குத்தந்தை நிரோ ஸ்டாலின் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story

