குடிநீர் வினியோகம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளில் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்மட்ட நீர்தேக்கத்தொட்டிகள், கிணறுகள் உள்ளிட்டவைகளின் எண்ணிக்கை குறித்தும், அவற்றில் தற்போது செயல்பாட்டில் உள்ளவை குறித்தும், பழுதாக உள்ளவைகளின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், குடிநீர் சீராக வழங்குவதில் உள்ள சிரமங்கள் குறித்தும், குடிநீர் சீராக வழங்குவதற்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்தும், பல்வேறு பழுதுகள் ஏற்படும் போது உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்தும், பொது நிதியினை பயன்படுத்தி ஆழ்துளை கிணறு அமைத்து கூடுதலாக குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்தும், அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி குடிநீர் வழங்கப்படுவதை உறுதிப் படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் குடிநீர் தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகள், பத்திரிகை மூலம் கிடைக்கப்பெறும் குறைதீர்க்க வேண்டிய செய்திகளுக்கு அரசு அலுவலர்கள் உடனடியாக செயல்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். குடிநீர் விநியோகம் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.மேலும், அனைத்து பகுதிகளிலும் தேவையான குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும். நடப்பாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடைபெறும் கட்டிடப்பணிகள் மற்றும் பிற பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story

