தஞ்சாவூர் அருகே காட்டுப்பன்றி தாக்கி நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளி காயம்

X
தஞ்சை அருகே நூறு நாள் வேலையில் ஈடுபட்டு இருந்த தொழிலாளியை காட்டுப்பன்றி தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார். தஞ்சை ஊராட்சி ஒன்றியம் நாகத்தியை சேர்ந்தவர் கலியராஜ் (வயது 62). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று நாகத்தி ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டப்பணியில் ஈடுபட்டு இருந்தார். நாகத்தி, வெள்ளாம்பெரம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவில் வயல்களை சேதப்படுத்தியும் வருகிறது. பகல் நேரங்களில் காட்டுப்பன்றிகள் ஆற்றங்கரையேரம் உள்ள புதர்களில் பதுங்கிக்கொள்கிறது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கலியராஜ் உள்ளிட்ட நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு காட்டுப்பன்றி கலியராஜை முட்டி கீழே தள்ளியதுடன் அவரை முகத்தில் கடிக்க பாய்ந்துள்ளது. அப்போது அவர் கையால் தடுத்துள்ளார். உடனே காட்டுப்பன்றி கையை கடித்துள்ளது. இதனைப்பார்த்த மற்ற தொழிலாளர்கள் கற்கள் மற்றும் கட்டைகளை தூக்கி வீசி காட்டுப்பன்றியை விரட்டி உள்ளனர். பின்னர் காயம் அடைந்தவரை உடனடியாக நாகத்தியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கலியராஜ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வயல்களை சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றி தற்போது ஆட்களையும் தாக்கத் தொடங்கி உள்ளது. எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story

