உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

X
அரியலூர், ஆக.6 - அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியம், அசாவீரன்குடிகாடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் நடைபெறுவதை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று (06.08.2025) புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார்.தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறை சேவைகள் / திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்”, 15.07.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்றையதினம் புதன்கிழமை செந்துறை ஊராட்சி ஒன்றியம் அசாவீரன்குடிகாடு ஊராட்சி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பநாயக்கன்பேட்டை ஊராட்சி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூவத்தூர் ஊராட்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்றது. அந்தவகையில் அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அசாவீரன்குடிகாடு, மணப்பத்தூர் மற்றும் பெரியாக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து அசாவீரன்குடிகாடு A.V.R. திருமண மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படுதல், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், முகாம்களுக்கு வருகை தரும் பொது மக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகள் அளிக்கப்படுவதையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ் எஸ்.சிவசங்கர் பார்வையிட்டார். முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஆவணங்களின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு வருவாய் துறையின் சார்பில் 07 நபர்களுக்கு வகுப்பு சான்று, வருமான சான்றுகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.37,860 மதிப்பில் மழைதூவான் மற்றும் 01 பயனாளிக்கு ரூ.1,250 மதிப்பில் குறுவை மாற்று பயிர் சாகுபடியும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 03 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 02 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவ பெட்டகங்களையும், தொழிலாளர் நலன் சார்பில் 02 நபர்களுக்கு புதிய பதிவுகளையும், மின்சாரத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு மின்இணைப்பு பெயர் மாற்ற ஆணைகளையும் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, இம்முகாமில் விண்ணப்பம் அளித்து பயன்பெற்ற பயனாளி பிரபாகரன் என்பவர் தெரிவிக்கையில், நான் அசாவீரன்குடிகாடு கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுவதாக எனது வீட்டிற்கு வந்து படிவம் மற்றும் கையேடுகள் வழங்கினார்கள்.அதனைத்தொடர்ந்து எனது வீட்டின் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்காக புதன்கிழமை நடைபெற்ற முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பம் அளித்தேன். உடனடியாக எனது மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு எனது வீட்டின் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நகல் வழங்கப்பட்டது. மின் இணைப்பு மாற்றம் செய்ய இயலாமல் பல நாட்களாக இருந்தேன். தற்போது எங்கள் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் உடனடியாக மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அரசின் சேவைகள் சென்று சேரும் வகையில் இத்தகைய முகாம்களை செயல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு நன்றி என பிரபாகரன் தெரிவித்தார். மேலும், 07.08.2025 அன்று அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அருங்கால், மேலக்கருப்பூர் மற்றும் சிறுவளுர் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து மேலகருப்பூர் வன அலுவலகம் அருகிலும், அரியலூர் நகராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கயர்லாபாத் அரசு நகர் சிறகு பந்தாட்டக்கூடம் அருகிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறவுள்ளது.இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, மாவட்ட நிலை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

