மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினர் குறை கூறி நிறுத்த முயற்சி : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

X
தமிழக முதல்வர் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை அதிமுகவினர் ஏதாவது குறை கூறி நிறுத்த முயற்சி செய்கின்றனர் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். தஞ்சாவூர் சுற்றுலா மாளிகை அருகே, புது ஆற்றங்கரையில் திமுக மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தேர்தல் பிரசாரத்துக்காக அமைக்கப்பட்ட அண்ணா அறிவகம் என்கிற செயல்பாட்டு அறையை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் புதன்கிழமை திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தது: அதிமுகவின் சி.வி. சண்முகத்துக்கு அரசியல் தெளிவு பிறந்திருக்கும் என நம்புகிறேன். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா பெயரை போட்டு நிறைய திட்டங்களைச் செய்தனர். அதையும் அவர்கள் செய்யக்கூடாது என நினைக்கின்றனரா? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கே துரோகம் செய்கிற கூட்டமாகத்தான் அந்தக் கூடாரம் திகழ்கிறது. அதில், சி.வி. சண்முகம் பிரதானமான உதாரணமாக இருப்பதாகத் தெரிகிறது. அதற்கு சரியான பதிலடியை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. தமிழக முதல்வர் மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவதைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். அதிமுகவினர் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் இந்த நாட்டுக்கும், மண்ணுக்கும் ஒன்றுமே செய்யவில்லை. அதையும் தாண்டி தற்போது செய்கிறவர்களையும் குறை சொல்லி நிறுத்துவதற்கு பார்ப்பது மிகக் கேவலமான செயல். அதற்கு உச்ச நீதிமன்றம் சரியான நியாயத்தை வழங்கியுள்ளது" என்றார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

