தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு தனியாக சிறப்பு வார்டு அமைத்துத் தரக் கோரிக்கை

X
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின், தஞ்சாவூர் வட்ட செயற்குழு கூட்டம் வட்டத் தலைவர் வி.ஜி.ராஜாராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை, தஞ்சாவூர் வட்ட ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. வட்டச் செயலாளர் பி.காசி அய்யன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு பிறகு மதியம் 12 மணிக்குள்ளாக, வேறு எந்த ரயில்களும் புறப்படவில்லை. எனவே, காலை 9 மணிக்கு தஞ்சையில் இருந்து கும்பகோணம், மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் வகையில் ரயில் வசதி செய்து தர வேண்டும். தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு தனியாக சிறப்பு வார்டு அமைத்துத் தர வேண்டும். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் வயதான மூத்த குடிமக்களுக்கு இருக்கை வசதி (நிழல் குடை) அமைத்து தர வேண்டும். எதிர்வரும் 30.8. 2025 அன்று கும்பகோணத்தில் நடைபெற உள்ள தஞ்சாவூர் மாவட்ட மாநாட்டில், தஞ்சாவூர் வட்டக்கிளை சார்பாக சுமார் 35 நபர்கள் பங்கேற்பது எனவும், பங்கேற்கவுள்ள நபர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் வட்டகிளைக்கு செயற்குழு உறுப்பினர்களாக எம்.துரைமாணிக்கம், எஸ்.ராஜரத்தினம், என்.மாரிமுத்து, எஸ்.அருளானந்தசாமி, டி.சுபாஷ் சந்திர போஸ், ஆர்.ரேணுகா, ஆர்.ராமதாஸ், க.கணேஷ்வரன், ஆர்.ராஜு, வி.கிருபளானி, எஸ்.மணிமன்னன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக, வட்ட இணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Next Story

