தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மிக அரிதான கை மூட்டு அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

X
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மிக அரிதான கை மூட்டு அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டத்தைச் சேர்ந்த 37 வயதுடைய எலக்டிரீசியன் ஜூலை 19 ஆம் தேதி சாலை விபத்தில் காயமடைந்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு இடது கை மூட்டு பாதிக்கப்பட்டு, அசையவற்ற நிலையில் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, இவருக்கு மருத்துவர்களான முடநீக்கியல் துறைத் தலைவர் (பொ) த. திருமலைபாண்டியன், இணைப் பேராசிரியர் க. கிஷோர் தலைமையில் சத்தியநாராயணன், மயக்கவியல் நிபுணர் சாந்தி, உதவிப் பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இச்சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதன் மூலம் அவர் குணமடைந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) சி. பாலசுப்ரமணியன் புதன்கிழமை தெரிவித்தது: பொதுவாக இடுப்பு எலும்பு, கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது வழக்கம். ஆனால், கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது மிகவும் அரிது. இச்சிகிச்சை மிகவும் சிக்கலானது என்பதால், டெல்டா உள்ளிட்ட தென் மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இதுவரை செய்யப்பட்டதில்லை. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக இந்த அரிதான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளி இதுவரை 70 சதவீதம் குணமடைந்துள்ளார். தொடர்ந்து இயன்முறை சிகிச்சை அளிக்கப்படுவதால், 15 நாட்களில் கையை மடக்கி, நீட்டுவது 95 சதவீதம் வாய்ப்புள்ளது. இந்தச் சிகிச்சை தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுவதும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இதுவே, தனியார் மருத்துவமனையில் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை செலவாகும்" என்றார் கல்லூரி முதல்வர். அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் ஏ. செல்வம், முட நீக்கியல் துறைத் தலைவர் நல்லி கோபிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story

