திருமானூர் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காச்சோள விதைகள்

X
அரியலூர். ஆக.8- அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இது குறித்து திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பரமசிவம் தெரிவித்துள்ளதாவது- திருமானூர் வட்டாரத்தில் மானாவாரி பயிராக அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் தரும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழக அரசின் வேளாண்மைத்துறை மூலம் வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல் விளக்கத்திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள், உயிர் உரங்கள், இயற்கை உரங்கள், நானோ யூரியா ஆகிய இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. திருமானூர் வட்டாரம் கீழப்பழூர் துணை வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கில் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 1000 எக்டருக்கும் ஆதிதிராவிடர் பிரிவு விவசாயிகளுக்கு 250 எக்டருக்கும் தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மக்காச்சோளம் சாகுபடி செய்யும் திருமானூர் வட்டார விவசாயிகள் கீழப்பழூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தங்களது நில உடைமை சான்று, சிட்டா, ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து மானிய விலையில் இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பரமசிவம் தெரிவித்துள்ளார். ______________________________
Next Story

