ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆதி திராவிட இன மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி கும்பிட மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு

X
அரியலூர், ஆக.8- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் அனைத்து மக்களுக்கும் குலதெய்வமாக வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிட மக்கள் கோவிலுக்குள் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி கும்பிட மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் ஆதி திராவிட மக்கள் சாமி கும்பிட எந்தவித தடையும் இல்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி கும்பிட வருவதாக அறிந்த போலீசார் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் கோவிலை சுற்றியும், ஊர் எல்லைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருந்தனர். நேர்த்திக்கடன் செலுத்தி படையல் இட்டு சாமி கும்பிட வந்த ஆதிதிராவிட இன மக்களை தடுத்த போலீசார் சாமி மட்டும் கும்பிட்டு விட்டு செல்லுமாறு கூறியதற்கு ஆதி திராவிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அனைத்து சமூக மக்களையும் அய்யனார் கோவிலில் சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும் எனக்கூறி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே அய்யனார் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்த பொருட்களுடன் ஆதிதிராவிட இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது சாமி என்ற பெயரால் சாதியத்தை தூக்கி பிடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக படைகளுக்கு கொண்டு வந்த பொருட்களை வைத்து அங்கேயே சாமி கும்பிட்டனர். இது குறித்து பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன் ஆண்டாண்டு காலமாக குலதெய்வமாக வழிபட்டு வந்த அய்யனார் கோவிலில் கடந்த இரண்டு வருடங்களாக நேர்த்திக்கடன் செலுத்தி சாமி கும்பிட ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தடுப்பது ஜனநாயக விரோதமானது ஜனநாயக நாட்டில் அனைத்து மக்களும் அனைத்து கோவில்களுக்கும் செல்லலாம் அனைத்து மக்களும் அர்ச்சகர் ஆகலாம் என நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டில் சாதியின் பெயரால் சாமி கும்பிடுவதை தடுக்கிறார்கள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் கோயில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெறும் எனக் கூறினார்.
Next Story

