ராஜபாளையத்தில் ஒரே நிறுவனத்தின் பேருந்துகள் மூலம் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக நிகழ்வு இடத்திலே உயிரிழந்தனர்.*

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒரே நிறுவனத்தின் பேருந்துகள் மூலம் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக நிகழ்வு இடத்திலே உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய் புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது மனைவி ஜோதி மீனாவை (40) அழைத்துக் கொண்டு ராஜபாளையம் வந்து கொண்டிருந்தார். இவர்களது வாகனம் இலந்தோப்பு அரசு பொது மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் தேவதானத்தில் இருந்து ராஜபாளையம் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மாரிமுத்து இருசக்கர வாகனத்தை பக்கவாட்டில் இடித்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஜோதி மீனா நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக நிகழ்விடத்திலேயே பலியானார். உடன் வந்த இவரது கணவர் மாரிமுத்து காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சங்கம் பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர் பொன் வேல் என்பவரின் மனைவி வேலுத்தாய் (42), ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தனது மகளின் பள்ளி நுழைவுக்கான விண்ணப்பத்தை அளித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவரது வாகனம் ஆர் ஆர் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அதே நிறுவனத்தின் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இவரது மேல் பேருந்தின் முன்புற சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானார். பலியான இரு பெண்களின் உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆர்ஆர் நகரில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் ஈஸ்வரன், அரசு மருத்துவமனை எதிரே விபத்தை ஏற்படுத்திய அதே நிறுவனத்தின் பேருந்து ஓட்டுனர் வைரவன் ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு விபத்தையும் ஏற்படுத்திய நிறுவன பேருந்துகள் அதி வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும் வேகத்தை குறைக்க போக்குவரத்து துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர் ஆர் நகர் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

