பேராவூரணி அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் 

பேராவூரணி அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் 
X
வண்டிப் பந்தயம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, தெற்கு நாட்டாணிக்கோட்டை கிராமத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்படும், முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயத்தை அமைச்சர், எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேராவூரணி அருகே உள்ள தெற்கு நாட்டாணிக்கோட்டை கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்களால் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.  பெரிய மாடு, சின்ன மாடு, கரிச்சான் குதிரை, கன்று மாடு என என நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் கலந்து கொண்டனர்.  மாட்டுவண்டிப் பந்தயத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.  இதில், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், திமுக விவசாய அணி அமைப்பாளர் குழ.செ.அருள்நம்பி, தலைமைக்கழகப் பேச்சாளர் அ.அப்துல் மஜீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பந்தயத்தை சாலையின் இருபுறமும் இருந்து ஆயிரக்கணக்கான பந்தயக் கலா ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.  போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப் பணம் ரூபாய் இரண்டரை லட்சம் மற்றும் சுழற் கோப்பை, சுழற் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பேராவூரணி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
Next Story