உழவர் நல மையங்கள் அமைப்பதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்

உழவர் நல மையங்கள் அமைப்பதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்
X
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் அவர்கள் வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2025 -2026 இல் மாநிலம் முழுவதும் 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் உழவர் நல மையங்கள் அமைப்பதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் அவர்கள் வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2025 -2026 இல் மாநிலம் முழுவதும் 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உழவர் நல மையங்களை அமைப்பதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.10 இலட்சம் மதிப்பீட்டிலான உழவர் நல சேவை மையம் அமைக்க 2 எண்களும், ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலான உழவர் நல சேவை மையம் அமைக்க 1 எண் இலக்கும் பெறப்பட்டுள்ளது. மொத்த திட்ட மதிப்பீட்டில் 30 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். உழவர் நல சேவை மையம் அமைப்பதற்கான தகுதியான வயது வரம்பு 20 - 45 வருடங்களுக்குள்ளும் மற்றும் கல்வி தகுதியான வேளாண்மை / தோட்டக்கலை / வேளாண் வணிகம் /வேளாண்பொறியியல் இதில் ஏதாவது ஒன்றில் பட்ட படிப்பு/ பட்டய படிப்பு பெற்றிருக்கவேண்டும். மேலும் அரசு நிறுவனத்தில் பணியில் இருத்தல் கூடாது. வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோர் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரார் கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருநபர் மட்டுமே நிதி உதவி பெற தகுதியுடையவராவார். விண்ணப்பிக்க 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு சான்றிதழ்,ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சரக்கு மற்றும் சேவை வரி எண், நிரந்தர கணக்கு எண், வகுப்பு எண், பயனாளிகளின் வங்கி கணக்கு புத்தகம்,வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம், மற்றும் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். உழவர் நல சேவை மையம் அமைக்க தேவையான விதை விற்பனை உரிமம், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் இணைய விரும்பும் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு படித்த நபர்கள் ரூ.10 இலட்சம் அல்லது ரூ.20 இலட்சத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கியில் கடனுதவி பெற வேண்டும். வங்கி கடன் வழங்கிய உத்தரவு கடிதத்தினை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் இணைய விரும்பும் விண்ணப்பதாரர்கள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கவிரும்பும் மதிப்பீட்டுக்கு ஏற்றவாறு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கூறியுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியான நபர்கள் இத்திட்டத்தின் மூலம் உழவர் நல சேவை மையம் அமைப்பதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story