ராமநாதபுரம் முளைப்பாரி விழா நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் 49 ஆம் ஆண்டு பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு இறுதி நாள் நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். முதுகுளத்தூர், எம்.தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களுக்கு காவல் தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் மழைவேண்டியும் உலக நன்மைக்காகவும் பொங்கல் மற்றும் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சியளான பால்குடம் ,அக்னி சட்டி, பூக்குழி இறங்குதல் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைள், வரலாற்று சிறப்பு மிக்க நாடகம், ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடைபெற்றது. இறுதி நாள் நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில், முளைப்பாரியை பெண்கள் செல்லியம்மன் கோவிலில் இருந்து அய்யனார் கோவில், வழிவிடு முருகன் கோவில், மற்றும் முதுகுளத்தூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியாக சங்கர பாண்டியன் ஊரணியில் இறக்கி வைத்து பெண்கள், ஆண்கள் என அனைவரும் கும்மியடித்து, ஒயிலாட்டம் ஆடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் சங்கரபாண்டி ஊரணி கங்கையில் முளைப்பாரிகளை கரைத்தனர். பின்னர் பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து, மொட்டையடித்து அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடன்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும் கொடி இறக்கமும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காப்பு கட்டி இருந்த பக்தர்கள் காப்புகளை அவிழ்த்து தங்களின் நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். திருவிழாவில் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். முளைப்பாரி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகுளத்தூர் தூரி செல்வநாயகபுரம் கிராமத்தினர் செய்திருந்தனர்.
Next Story

