தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்து மூதாட்டி பலி

X
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் நடந்து சென்ற போது, கால் வழுக்கி கல்லணைக் கால்வாயில் விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார். தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி சரோஜா(85). இவருக்கு 2 மகள்கள். ஒரு மகள் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருகிறார். மற்றொரு மகளான சுசீலாவின் கணவர் ஆற்றுப்பாலம் பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். அந்த டீக்கடையின் அருகிலேயே ஒரு அறையில் சரோஜா வசித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சரோஜா ஆற்றுப்பாலம் பகுதியில் கல்லணைக்கால்வாயை ஒட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது கால் வழுக்கி கல்லணைக்கால்வாயில் சரோஜா விழுந்துள்ளார். அதிகாலை என்பதால் அவர் ஆற்றில் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை. இதற்கிடையில் வெகு நேரமாகியும் தனது தாய் சரோஜா வராததால் சுசீலா மற்றும் அவரது குடும்பத்தினர் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதுதான் கல்லணைக்கால்வாய் கரையில் சரோஜா பயன்படுத்தும் வாக்கிங் ஸ்டிக் கிடந்துள்ளது. இதனால் தனது தாய் சரோஜா கல்லணைக்கால்வாயில் விழுந்து இருக்கலாம் என்று சுசீலா தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை வல்லம் வாரியில் ஒரு மூதாட்டியின் உடல் சிக்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த உடலை காவல்துறையினர் கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து சுசீலா அங்கு சென்று உடலை பார்த்து தனது தாய் சரோஜாதான் என்று உறுதிப்படுத்தினார். பின்னர் சரோஜாவின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இதுகுறித்து புகாரின் பேரில் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story

