சேலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

X
சேலம் தாதகாப்பட்டி தாகர் தெருவை ஜெகநாதன். இவருடைய மகன் மாரிமுத்து (வயது 23). இவர் கூரியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர் சரியான சிகிச்சை பெறவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாரிமுத்து மனவேதனை அடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணயளவில் அவர் வீட்டில் இருந்தவர்களிடம் தூங்குவதற்கு செல்வதாக கூறி அறைக்கு சென்றார். பின்னர் இரவு 9 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து இரவில் சாப்பிட வெளியே வரவில்லை. மேலும் அறையின் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாரிமுத்து மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் தொங்கியதை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் தகவல் அறிந்ததும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தற்கொலைக்கு முன்பு மாரிமுத்து எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், எனது தற்கொலைக்கு யாரும் காரணம் கிடையாது, அம்மா என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

