வேட்டாளியம்மன் கோயில் அருகில் திடீர் மறியல்

X
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு அருகே இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான வேட்டாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையான இன்று சிறப்பு பூஜையும், அன்னதானம் நடைபெற்றது. காலை 10 மணி அளவில் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. அப்போது கோயில் அருகில் வேட்டாளியம்மன் திருக்கோயில் பக்தர்கள் சங்கம் என்ற பெயரில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அந்த பேனரை அகற்ற வேண்டும் என்றனர். அப்போது அங்கு வந்த பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென பக்தர் ஒருவர் கோயில் முன் உள்ள ரோட்டில் படுத்து மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து செட்டிகுளம் - கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து அந்த பேனர் கோயில் அருகில் வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story

