தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் இதய ஒத்திசைவு சிகிச்சை

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் இதய ஒத்திசைவு சிகிச்சை
X
மருத்துவக்கல்லுாரி
தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் இரண்டாவது முறையாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதய ஒத்திசைவு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மருத்துவக்கல்லூரி முதல்வர் எம்.பூவதி தெரிவித்தார்.  இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை தெரிவித்தது: இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கேத்லாப் என்கிற இதய உட்செலுத்தி கதிரியக்க ஆய்வுக் கூடம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இதுவரை 13 ஆயிரத்து 908 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், மாரடைப்புக்கு ஒரு மணிநேரத்துக்குள் செய்யும் சிகிச்சை 2 ஆயிரத்து 171 பேருக்கும், 24 மணிநேரத்துக்குள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை 3 ஆயிரத்து 463 பேருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதய துடிப்பு குறைவாக உள்ள நோயாளிகள் 75 பேருக்கு நிரந்தர இதய துடிப்பு கருவியும், 248 பேருக்கு தற்காலிக இதய துடிப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பிறவியிலேயே இதய குறைபாடுள்ள குழந்தைகள் 4 பேருக்கும், பெரியவர்கள் 10 பேருக்கும் அறுவை சிகிச்சையின்றி இதய உட்செலுத்தி சிகிச்சை முறை மூலம் காயில் வைத்து இதய குறைபாட்டை சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 43 வயது ஆண் ஏற்கெனவே இதய பைபாஸ் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இதய செயல்திறனும், இதய துடிப்பும் குறைவாக இருந்ததால், இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். இவருக்கு இதய ஒத்திசைவு சிகிச்சை டிஃபிப்ரிலேட்டர் என்கிற சாதனம் ஜூலை 4 ஆம் தேதி பொருத்தப்பட்டது. இதன் பின்னர், அவருடைய இதய செயல்திறன் மேம்பட்டுள்ளது. இதே சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை செலவாகும். இம்மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இச்சிகிச்சை கோவைக்கு அடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியைப் பொருத்தவரை முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.  இதையடுத்து, இச்சிகிச்சை மேற்கொண்ட இதயத் துறைத் தலைவர் பி.ஜெய்சங்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினரை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாராட்டினார். அப்போது, முன்னாள் பொறுப்பு முதல்வர் சி.பாலசுப்பிரமணியன், மருத்துவக் கண்காணிப்பாளர் சி.ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் ஏ.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வராக எம்.பூவதி திங்கள்கிழமை காலை பொறுப்பேற்றார்.
Next Story