பட்டுக்கோட்டையில் இருந்து தங்கள் ஊராட்சிகளை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிக்காடு, இரண்டாம்புளிக்காடு, அழகியநாயகிபுரம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பட்டுக்கோட்டை தாலுகாவில் இருந்து வருகிறது. இங்குள்ள பொதுமக்கள் அருகில் உள்ள பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் மூலம் அனைத்து அரசு சேவைகளையும் பெற்று வருகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரி, வேலைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, போக்குவரத்து வசதி என அனைத்துக்கும், பட்டுக்கோட்டை தாலுகா இந்த ஊராட்சிகளுக்கு வெகு அருகில் உள்ளது. இந்நிலையில், இந்த மூன்று ஊராட்சிகளைத்தனியாக பிரித்து புதிதாக உருவாக்க உள்ள அதிராம்பட்டினம் தாலுகாவுடன் இணைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தங்கள் கோரிக்கைகளை அரசு அலுவலர்களிடம் மனுவாக அளித்துள்ளனர் பட்டுக்கோட்டையை விட வெகு தொலைவில் உள்ள அதிராம்பட்டினத்திற்கு போக்குவரத்து வசதி இல்லை. எனவே, அனைத்து வசதிகளும் உள்ள பட்டுக்கோட்டையிலேயே தங்கள் ஊராட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆண்டிக்காடு, இரண்டாம்புளிக்காடு, அழகியநாயகிபுரம் ஆகிய இந்த மூன்று ஊராட்சிகளையும் பிரித்து, புதிதாக துவக்க உள்ள அதிராம்பட்டினம் தாலுகாவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300 பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் இரண்டாம்புளிக்காடு கடைத்தெருவில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக வியாபாரிகளும் தங்கள் கடைகளை அடைத்து விட்டு ஆதரவு தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, காவல்துறை ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், "அவர்களின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story



