பெரம்பலூர் கிளை நூலகத்தில் தேசிய நூலக தினவிழா
பெரம்பலூர் கிளை நூலகத்தில் தேசிய நூலக தினவிழா: பெரம்பலூரில் தேசிய நூலக தந்தை என போற்றப்படும் சீயாளி ராமாமிர்தம் அரங்கநாதன் பிறந்த தினவிழா, நூலக தினவிழா மற்றும் வாசகர் வட்ட சந்திப்பு விழா தெப்பக்குளம் அருகே மேற்கு வானொலித்திடலில் உள்ள கிளை நூலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நூலக வாசகர் வட்ட தலைவரும், பண்டிதர் அயோத்திதாசர் விருதாளருமான தேனரசன் தலைமை தாங்கினார். தன்னார்வலர் பாளை செல்வம் வரவேற்றார். மாவட்ட நூலகஅலுவலர் தேசிய நூலக தந்தையின் உருவப்படத்தை திறந்துவைத்து, ரோஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து நூலக வாசகர்கள் அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கவிஞர் அகவி, அறிவை விரிவு செய்யும் என்ற தலைப்பிலும், கல்லூரி பேராசிரியர் தமிழ்க்குமரன் புத்தகம் வாசிப்போம் என்ற தலைப்பிலும், பேராசிரியை நீலவேணி சுவாசிப்பே வாசிப்பு என்ற தலைப்பிலும் கருத்துரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் வாசகர் வட்ட பொருளாளர் செல்வமணியன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர் சீரங்கன், நூலகர் சுரேஷ், தமிழ்ஆர்வலர்கள் சுகனேசுவரன், பழ.முத்துசாமி மற்றும் தமிழ்ஆர்வலர்கள், இலக்கியஆர்வலர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் கிளைநூலகரும், வாசகர் வட்ட செயலாளருமான முருகன் நன்றி கூறினார். பெரம்பலூர் கிளை நூலகத்தில் தேசிய நூலக தினவிழாவில், தேசிய நூலக தந்தை என போற்றப்படும் சீயாளி ராமாமிர்தம் அரங்கநாதனின் உருவப்படத்தை மாவட்ட நூலக அலுவலர் முத்துக்குமரன் திறந்துவைத்து மலர்தூவி மரியாதை செலுத்தியகாட்சி. அருகில் வாசகர் வட்ட தலைவர் தேனரசன் நூலகர் முருகன் உள்ளனர்.
Next Story



