தஞ்சாவூர் மாவட்டத்தில், உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

X
உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையை அணுகலாம் என வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் ஆர்.சுதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, "தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் மாநிலம் முழுவதும் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உழவர் நல மையங்களை அமைப்பதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் ரூ.10 மற்றும் 20 லட்சம் மதிப்பீடுகளில் உழவர் நல சேவை மையம் அமைக்கலாம். மொத்த திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். தகுதிகள் வயதுவரம்பு 20 முதல் 45க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் வணிகம் பிரிவு பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும். திட்டத்திற்கான நிபந்தனைகள் அரசு நிறுவனத்தில் பணியில் இருக்கக் கூடாது. வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோர் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கணினியை கையாளும் திறன் பெற்று இருக்க வேண்டும். இத் திட்டத்தின் மூலம் குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே பயன்பெற முடியும். விண்ணப்பத்துடன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு சான்றிதழ், ஆதார் அடையாள நகல், குடும்ப அட்டை நகல், சரக்கு மற்றும் சேவை வரி எண், நிரந்தர கணக்கு எண், விண்ணப்பதாரரின்வங்கி கணக்கு புத்தக நகல், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் மற்றும் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும் மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியான நபர்கள் இத்திட்டத்தின் மூலம் உழவர் நல சேவை மையம் அமைப்பதற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்ணை 04362-256628 தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Next Story

