காங்கேயம் அரசு கலைக்கல்லூரி கட்டடத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி நத்தக்காடையூரில் ஆர்ப்பாட்டம்

காங்கேயம் அருகே, முள்ளிபுரத்தில் உள்ள காங்கேயம் அரசு கலைக்கல்லூரி கட்டடத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி நத்தக்காடையூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கேயம் அருகே, நத்தக்காடையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தாலுகா செயலர் கணேசன் தலைமை வகித்தார். காங்கேயம் அருகே முள்ளிபுரத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2013 ஆம் ஆண்டில் ரூ.6 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காங்கேயம் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தக் கல்லூரி கட்டடம் விரிசல் விழுந்து, சற்று கீழே இறங்கி உள்ளது. எனவே, காங்கேயம் அரசு கலைக் கல்லூரி கட்டடத்தை உயர்கல்வித் துறையும், தமிழக அரசும் உடனே ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இக்கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், கட்சியின் காங்கேயம் தாலுகா குழு உறுப்பினர் செல்வராஜ், வெள்ளகோவில் சிவநாதபுரம் கிளைச் செயலாளர் லோகேஸ்வரன், நல்லிகவுண்டன் வலசு கிளைச் செயலாளர் வேலுச்சாமி தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் செல்லமுத்து, தாலுகா குழு உறுப்பினர் கருப்புசாமி உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story