ஏரல் உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்:

ஏரல் உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்:
X
ஏரல் உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி
மராமத்து பணி முடிந்த நிலையில் ஏரல் தாமிரபரணி ஆறு உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபார நகரமான ஏரலுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள், மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இதில், குரும்பூர், சாத்தான்குளம், நாசரேத் போன்ற பகுதியில் இருந்து ஏரலுக்கு வரும் வாகனங்கள் தாமிரபரணி ஆற்றை கடப்பதற்கு தரைமட்ட பாலம் கட்டப்பட்டது. மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இந்த தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும். இதனால் ஏரல்-குரும்பூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வந்தது. இப்பிரச்சினைககு தீர்வுகாணும் வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.16½ கோடியில் ஆற்றின் குறுக்கே உயர்மட்டபாலம் கட்டப்பட்டு, மழை, வெள்ளம் காலத்திலும் தடையற்ற போக்குவரத்து நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை, வெள்ளத்தில் உயர்மட்ட பாலத்தின் வடபகுதியில் உள்ள இணைப்பு சாலை சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சுமார் 2 வாரத்திற்கு பின்னர், சிதைந்து கிடந்த தரைமட்ட பாலம் சரி செய்யப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது. தொடர்ந்து உயர்மட்ட பாலத்தில் ரூ.6 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதில் பாலத்தை 37 மீ நீளம் அதிகரித்து புதிதாக 2 தூண்கள் அமைத்து இணைப்பு சாலையும் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து தொடங்கி, நடந்து வருகிறது. மேலும், தரைமட்ட பாலம் வழியாகவும் போக்குவரத்து நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், உயர்மட்ட பாலத்தில் விளக்கு வசதி செய்யப்படாமல் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, சிதைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைத்து மின்விளக்குகளை பொருத்தி எரிய வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story