மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில். தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.சதீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். பின்னர் திறந்த ஈப்பு வாகனத்தில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் வானில் வண்ண பலூன்களை பறக்க விட்டார். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி பாராட்டினார். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் குட்டி ரோபோ மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை வரவேற்று, வணக்கம் சொல்லி சாகசம் செய்தது. சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பார்ப்போரை கவர்ந்திழுத்தது. தொடர்ந்து நிகழ்ச்சியில் நாட்டுப்பற்று மிக்க வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவ மாணவிகள் நடத்தினர். மேலும் தீ அணைப்பது குறித்து, தீயணைப்பான் உபகரணங்கள் வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தீயணைப்பு துறை வரலிற்றில் முதன் முறையாக, தருமபுரி தீயணைப்பு துறையினர் தேசிய கொடியின் மூவர்ணத்தில், தண்ணீரை பீய்ச்சி அடித்து, வானில் வர்ண ஜாலத்தை ஏற்படுத்தி, தீயில் நுழைந்து பாதுகாப்பு பணி செய்வது போன்று சாகச நிகழ்ச்சிகளை செய்து அசத்தினர். அனைவரையும் ஈர்த்தனர். தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






