அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.
X
அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் இன்று 79-வது சுந்திரதினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்த கிராம சபைக் கூட்டத்தில், 01.04.2025 முதல் 31.07.2025 வரையிலான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கிராம சபைக் கூட்டத்தில், மேலும் பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைதுறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக விரிவாக எடுத்துரைத்தனர். இக்கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:- அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில்; ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக அரசானது அனைத்துத் துறைகளிலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. இம்முகாமானது கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். மேலும், தமிழகம் முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ், 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு வழங்கக்கூடிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து, இந்த கிராம சபை கூட்டத்தில் மருத்துவத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். மேலும், வேளாண்மை துறையின் சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் உளுந்து செயல் விளக்கத்திடல் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தோட்டக்கலைத்துறையின் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வீரிய ஒட்டு ரக காய்கறி விதைகள் விவசாயிக்கு மானியமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் விவசாயிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் கிராமச்சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.1,00,000- வீதம் இரண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,00,000-த்திற்கான சுழல் நிதிக்கான காசோலையினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
Next Story