ஆக்கிரமிப்பு அகற்ற கூறினால் பிடித்து உள்ளே போட்டு விடுவேன் என வட்டாட்சியர் மிரட்டுவதாக முன்னாள் ராணுவ வீரர் புகார் செட்டிகுறிச்சி கிராம சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு
ஆக்கிரமிப்பு அகற்ற கூறினால் பிடித்து உள்ளே போட்டு விடுவேன் என வட்டாட்சியர் மிரட்டுவதாக முன்னாள் ராணுவ வீரர் புகார் - அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராம மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் புகார் தெரிவித்ததால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிகுறிச்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா கலந்து கொண்டார். அப்போது கிராமத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் கிராம சபை கூட்டம் நடைபெறும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். அப்போது இந்த கிராம சபை கூட்டத்தில் செட்டிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன் பேசுகையில், இந்த கிராமத்திற்கு சமூக நல பணிகள் செய்யும்போது பல போராட்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது. செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இது குறித்து இரண்டு வருடமாக போராடி வருகிறேன் மேல்முறையீடு செய்யுங்கள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என கூறுகிறார்கள் மன விரக்திக்கு நான் ஆளாகி விட்டேன். சில நாட்களுக்கு முன் என்னுடைய மாமா ஆக்கிரமிப்புகளை எடுக்க கோரி வட்டாட்சியரிடம் கூறியுள்ளார் ஆனால் வட்டாட்சியர் பிடித்து உள்ளே போட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். சட்டவிரோத மது விற்பனை இங்கு அதிகமாக உள்ளது இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் என்னை குற்றவாளி போல கீழே அமர வைக்கிறார்கள். இதனால் மன விரக்தி அடைகிறது என பேசினார். அதை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள் அதை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார்.
Next Story





