இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா தொடங்கியது.... பக்தர்கள் வெள்ளம் சூழ அம்மன் வீதி உலா.....

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில்   ஆடி கடைசி வெள்ளி திருவிழா தொடங்கியது....  பக்தர்கள் வெள்ளம் சூழ அம்மன் வீதி உலா.....
X
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா தொடங்கியது.... பக்தர்கள் வெள்ளம் சூழ அம்மன் வீதி உலா.....
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா தொடங்கியது.... பக்தர்கள் வெள்ளம் சூழ அம்மன் வீதி உலா..... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வர். எனினும் சித்திரை, ஆடி,தை, பங்குனி ஆகிய மாதங்கள் சிறப்பு வாய்ந்த மாதங்கள் ஆகும். இம்மாதங்களில் அம்மனுக்கு சிறப்பு விழாக்கள் எடுக்கப்படுவதால் அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். குறிப்பாக தென் தமிழகத்தைச் சேர்ந்த திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி சங்கரன்கோவில் புளியங்குடி சுரண்டை கடையநல்லூர் கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அதிகமானோர் குடும்பம் குடும்பமாகவும் சில பகுதிகளில் மொத்த கிராம மக்களும் பாதயாத்திரையாக அம்மனை தரிசனம் செய்ய வருவர். இவ்விழா காலங்களில் சாத்தூரிலிருந்து அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கி வருகிறது. இந்த நிலையில் இன்று ஆடிப்பெரும் திருவிழாவான கடைசி வெள்ளி திருவிழா இன்று கோலாகலமாக நடைபெறுவதையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில்பட்டி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி,திருநெல்வேலி தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் இடைவிடாது இரவு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களும் கார் வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை மாவிளக்கு, தொட்டில் குழந்தை, உருண்டு கும்பிடுதல், அழகு குத்துதல், முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்திய வண்ணம் உள்ளனர். ஆடி கடைசி வெள்ளி திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான இன்று மதியம் 2 மணிக்கு மேல் உற்சவ அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இன்று அதிகாலையில் 3 மணிக்கு அம்மனுக்கு பால் பன்னீர் ஜவ்வாது தேன் இளநீர் உள்ளிட்ட 21 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலிங்கல் மேட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் இந்த வருடம் அம்மனை ரிஷப வாகனத்தில் பவனி வர செய்வார்கள் இதில் நத்தத்துப்பட்டி கிராம பொதுமக்களும் கலந்து கொள்வார்கள். இருக்கன்குடி நென்மேனி மேட்டுப்பட்டி கலிங்கல் மேட்டுப்பட்டி பொதுமக்கள் செண்டா விருது குடை மேளம் சேவித்து அம்மனை அழைத்து வந்து சிறப்பு செய்வார்கள் அப்பனேரி கிராம பொதுமக்கள் நகர ஒலி எழுப்பி உற்சவத்தை சிறப்பு செய்வார்கள். இருக்கன்குடி மேட்டில் இருக்கும் உற்ச அம்மன் ரிஷப வாகனத்தில் சாலையில் அமைந்துள்ள திருக்கண்களை வளம் வந்து இருக்கங்குடி முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு அருள் அளித்த வண்ணம் அர்ஜுனா நதியை கடந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆலயத்தை சுற்றி வலம் வந்து கொழுமண்டபத்தை வந்தடைந்து அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மறுநாள் காலை மீண்டும் கோவில் சென்றடைவார். அம்மன் வீதி உலா நிகழ்வானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை வணங்கி வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று ஆடி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு திருக்கோவிலில் காலை 8 மணி முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமும் பிற்பகல் 12 மணிக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்தும் நடைபெற உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிதண்ணீர் கழிப்பிட வசதி குளியலறை தங்குமிடம் தாய்மார்களுக்கு பால் ஊட்டும் அறை, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளைகோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இருக்கன்குடி பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். மேலும் அம்மன் ரிஷப வாகன வீதி உலாவினை கோவில் இணையதள முகவரியில் நேரலை ஒளிபரப்பும் செய்யப்பட்டது.
Next Story