சாலையில் டயர் வெடித்து நின்ற கார், போக்குவரத்து நெரிசல்

X
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 45; தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன், சொந்த ஊரான திருச்சியில் இருந்து, 'ஹூண்டாய் ஐ20' காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், செங்கல்பட்டு அருகே ஜி.எஸ்.டி., சாலையில் வந்த போது, காரின் பின்புற வலது பக்க டயர் திடீரென வெடித்துள்ளது.இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே உள்ள தடுப்பில் ஏறி நின்றது.அதே நேரத்தில், பின்னால் சென்னை நோக்கி வந்த கும்பகோணம் போக்குவரத்துக் கழக அரசு பேருந்து, கார் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக, கார் மற்றும் பேருந்திலிருந்த அனைவரும் காயமின்றி தப்பினர். இந்த விபத்து காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில் நீண்ட துாரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார், விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி, மற்ற வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தினர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story

