கோவை: ஆம்னி பேருந்துகளுக்கு கட்டாய வரி வசூல் செய்வதாக புகார் !

X
கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். சங்க நிறுவனர் ஜெயம்பாண்டியன் பேசியதாவது: முறையான வரிகள் அனைத்தையும் செலுத்தியும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தேவையில்லாத அபராதங்களை விதிப்பதாக குற்றம் சாட்டினார். டோல் கேட்களில் மணி நேரங்களுக்கு பேருந்துகளை நிறுத்துவது பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம், மன உளைச்சல் ஏற்படுத்துவதாக கூறினார். அதிகாரிகள் சோதனை செய்வதை எதிர்க்கவில்லை, ஆனால் பயணிகள் இருக்கும் நேரத்தில் அல்லாது, நேரடியாக நிலையத்திற்கு வந்து சோதனை செய்யலாம் எனக் கோரினார். போக்குவரத்து துறை கட்டணத்தை நிர்ணயிக்காமல், அதிக கட்டணம் வசூலிக்கிறோம் என்ற காரணத்தால் அபராதம் விதிப்பதாகவும், அதேசமயம் அவர்கள் நிர்ணயித்தால் அதற்கேற்ப இயங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாநில, மாநிலங்களுக்கு இடையேயான வரிகளையும், ஆண்டுக்கு சாலை வரியாக 6-7 லட்சம் வரை செலுத்தியும் அபராதங்கள் விதிக்கப்படுவதாக அவர் கூறினார். "கஞ்சா வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது போல் எங்களுக்கும் விதிக்கிறார்கள்" என்றும் குற்றம் சாட்டினார். வார நாட்களில் குறைந்த கட்டணத்தில் இயங்கினாலும், பண்டிகை நாட்களில் சற்று கட்டணம் உயர்த்தப்படுவதாக சுட்டிக்காட்டினார். எல்லா ஆவணங்களும் இருந்தும் "சீட் பெல்ட் இல்லை" போன்ற காரணங்களால் அபராதம் விதிக்கப்படுவதாகவும், இதனால் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அனைவரும் மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்டமாக போக்குவரத்துத் துறை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எச்சரித்தனர்.
Next Story

