நெல்மூடைகளில் இருந்து வரும் மூங்கில் பூச்சி வண்டுகளால் தூக்கம் கெட்டு விட்டதாகவும் உணவு சாப்பிட கூட முடியவில்லை எனவும் பொதுமக்கள் புகார்

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அரசு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் நெல்மூடைகளில் இருந்து வரும் மூங்கில் பூச்சி வண்டுகளால் தூக்கம் கெட்டு விட்டதாகவும் உணவு சாப்பிட கூட முடியவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி, வளையாபதி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதன் அருகே செயல்படும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் மற்றும் அரிசி மூடைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து உற்பத்தியாகும் லட்சக்கணக்கான மூங்கில் பூச்சி வண்டுகள் அருகே உள்ள வீடுகளுக்குள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள உணவுகளில் விழுவதாகவும், தூங்கும்போது மூக்கு காதுகள் கண்களுக்குள் செல்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து விற்பனை கூட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் கடந்த சில வாரங்களாக நிம்மதியாக சாப்பிடவும், தூங்கவும் முடியவில்லை என்பதால் நகராட்சி நிர்வாகம் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நூற்றுக்கணக்கான பூச்சிகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story

