தஞ்சாவூர் மாவட்ட தமுஎகச மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், தஞ்சை மாவட்ட 16 ஆவது மாநாடு, ஒரத்தநாடு மகளிர் அறக்கட்டளை குழுமம், தோழர் சா.ஜீவபாரதி நினைவரங்கில் நடைபெற்றது. தி.தனபால், பா.சத்தியநாதன், ஆயிராசு ஆகியோர் மாநாட்டிற்கு தலைமை வகித்தனர். வை.தம்பி அய்யா வரவேற்றார். ஸ்ரீலெஸ்ரீ அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா. விஜயகுமார் அமைப்பு அறிக்கையையும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கு.இலக்கியன் கலை இலக்கிய அறிக்கையும், கும்பகோணம் கிளைச் செயலாளர் கா.அசோக்குமார் பண்பாட்டு அறிக்கையும், மாவட்டப் பொருளாளர் முருக.சரவணன் வரவு செலவு அறிக்கையும் முன்வைத்துப் பேசினர். 'ஓராண்டு வாசிப்பும், எதிர்கால திட்டமிடலும்' என்ற தலைப்பில், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், '50 ஆண்டை கடந்து ஓடும் நதி' என்ற தலைப்பில், மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் ஆகியோர் பேசினர். மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றினார். நிறைவாக, ஒரத்தநாடு கிளை செயற்குழு உறுப்பினர் ஆஆஇரா.வசந்த குமார் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் மாநாட்டில், மாவட்டத் தலைவராக முருக.சரவணன், மாவட்டச் செயலாளராக சத்தியநாதன், மாவட்டப் பொருளாளராக அசோக்குமார் உள்ளிட்ட 41 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானம் தமிழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முறைகேடுகள், நிர்வாக மோசடிகள் உள்ளிட்ட குறைபாடுகளை களைந்து அதனை பாதுகாக்க வேண்டும். ஊர் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகளை இரவு 7 முதல் 10 மணி வரை நடத்துமாறு காவல்துறை கட்டுப்பாடு இருப்பதால், நாட்டுப்புற கலைஞர்களுக்கான வாய்ப்புகள் குறைகிறது. எனவே, நிகழ்ச்சிகளை அதிகாலை வரை அல்லது நள்ளிரவு வரை நடத்திட அனுமதிக்க வேண்டும். புகைப்பட, வீடியோ கலைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். கிராம, நகர நூலகங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி, நூலகர்கள், கண்காணிப்பாளர்களை நியமித்து மக்கள் பயன்பாட்டிற்கு உதவிட வேண்டும். தமிழகத்தின் கிராமங்களில் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை, குழு அமைத்து தேர்வு செய்து, அவற்றை அரசு செலவில் வாங்கி நூலகங்களுக்கு வழங்க வேண்டும். தென்னக பண்பாட்டு மையத்தில் கிராமிய மேடை கலைஞர்களை உறுப்பினராக்கி, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் அவர்களை பயன்படுத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story




