மதுராந்தகம் ஏரி உயர்மட்ட கால்வாயை, துார்வாரி சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம் ஏரி உயர்மட்ட கால்வாயை, துார்வாரி சீரமைக்க கோரிக்கை
X
மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் உயர்மட்ட கால்வாயை, துார்வாரி சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி, 4,752 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலமாக, 40க்கும் மேற்பட்ட கிராமங்களில், மொத்தம் 5,000 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஏரியை துார்வாரி சீரமைக்க, 2021ம் ஆண்டு, 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2022ம் ஆண்டு ஜூனில் பணி துவங்கி, பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர். மதுராந்தகம் ஏரியின் உயர்மட்ட கால்வாய், மோச்சேரி பகுதியில் உள்ளது. இந்த உயர்மட்ட கால்வாய், 30க்கும் மேற்பட்ட ஏரிகளின் பிரதான நீர்வரத்து கால்வாயாக உள்ளது.மதுராந்தகம் ஏரியில் துவங்கி செய்யூர் அருகே உள்ள வேட்டைக்காரகுப்பம் கிராமத்தில் உள்ள ஏரியில் முடியும் இக்கால்வாய், 28 கி.மீ., நீளம் கொண்டது. இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கடந்த 1980ல், துார்வரப்பட்ட நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. ஆங்காங்கே உள்ள மதகுகள் உடைந்து, கால்வாயில் மரங்களும் அதிக அளவில் வளர்ந்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கோடை காலத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மதுராந்தகம் ஏரி துார்வாரும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஏரியின் இந்த உயர்மட்ட கால்வாயையும் சீரமைக்க வேண்டும். மேலும் கால்வாயின் குறுக்கே, 10 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Next Story