ஜெயங்கொண்டம் அருகே உடல் நலக்குறைவால் உயிர் இழந்த மதிமுக ஒன்றிய செயலாளர் உடல் தானம்.

X
அரியலூர், ஆக.19- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய மதிமுக செயலாளராக துரை.பன்னீர்செல்வம் இருந்து வந்தார் இவர் கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது உடலுக்கு அரியலூர் மதிமுக சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன், மதிமுக மாநில விவசாய அணி செயலாளர் வாரணாசி ராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் துரை.பன்னீர்செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது தனது குடும்பத்தாரிடம் நான் இறந்துவிட்டால் எனது உடலை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து துரை.பன்னீர்செல்வம் உயிரிழந்த நிலையில் அவரது உடல் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. உயிரிழந்த துரை.பன்னீர்செல்வத்தின் உடலுக்கு குடும்பத்தார் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து வந்த மருத்துவர்கள் துரை.பன்னீர்செல்வத்தின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு வாங்கி சென்றனர். பன்னீர்செல்வத்தின் உடல் பதப்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தான் இறந்த பிறகும் தனது உடல் நூற்றுக்கணக்கான மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்த துரை.பன்னீர்செல்வத்தின் எண்ணம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது
Next Story

