அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும் தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கோரிக்கை

X
அரியலூர், ஆக.19- அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட ஆளும் கட்சி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் தேமுதிக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றவுடன் கட்டப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, உள்ளம் தேடி இல்லம் நாடி எனும் பிரச்சாரத்தை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அரியலூர் சத்திரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்து நிலையம் வரை நடந்தும், வாகனத்தில் நின்றவாறும் மக்கள் சந்தித்தார். தொடர்ந்து, பேருந்து நிலையம் அருகே அவர் பேசியது: அரியலூரில் கடந்த 3 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்துவரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். அரியலூர் நகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும். அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும். இல்லையெனில், தேமுதிக வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெறும். அப்போது, ஒருங்கிணைந்த நீதிமன்றம் உட்பட அனைத்து பணிகளையும் செய்வோம். மேலும், அரியலூரில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இங்குள்ள சிமென்ட் ஆலைகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முன்னுரிமைக்கு வலியுறுத்தப்படும். எனவே, தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து,கீழப்பழுவூர், ஏலாக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.நிகழ்ச்சியில் கழக பொருளாளர் சுதீஷ், மாவட்டச் செயலாளர்கள் அரியலூர் ராம.ஜெயவேல்,பெரம்பலூர் அய்யப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

