பேராவூரணி அருகே உள்ள சீகன்காடு பாசனக்குளம் சீரமைக்கப்படுமா...?
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சீகன்காடு கிராமத்தில், சுமார் 31.58 ஏக்கரில் பாசனக்குளம் உள்ளது. இந்த பாசனக் குளத்தில் பராமரிப்பு இல்லாமல் மதகுகள், நீர் போக்கிகள் அனைத்தும் உடைந்து, சேதமடைந்த நிலையில், குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், வீணாக வாய்க்காலில் வெளியேறுகிறது. மேலும், சில இடங்களில் பாசன வயல்களை உடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறுகிறது. இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய் கோட்டாட்சியர், நீர்வளத்துறை, நீர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால்களில், தண்ணீர் முறை வைக்காமல்,அதிகளவில் வந்து கொண்டிருக்கும் நிலையில், குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாசனக்குளத்தை தூர்வாரி, நீர்ப்போக்கிகள், மதகுகளை சீரமைத்து, குளத்தில் நீர் நிரப்பித் தர வேண்டும். இப்பகுதி பாசனத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சீகன்காடு கிராம மக்கள் சார்பில், தர்மசீலன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story



