முள் கட்டையால் அடித்து மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் - கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு !

X
கோவை மாவட்டம், மதுக்கரையை சார்ந்த கூலித் தொழிலாளி மனோஜ்குமார். அதே பகுதியில் வசித்த மருதம்மாள், மனோஜ்குமாருக்கு பெரியம்மா முறை. மருதம்மாளின் மகளும் மனோஜ்குமாரின் சகோதரி முறையில் உள்ள நந்தினியின் மகள் வசுந்தரா. வசுந்தரா காதுகுத்துக்கு சீர் செய்ய, தாய்மாமன் முறையில் உள்ள மனோஜ்குமார், நந்தினியிடம் இருந்து 5,000 ரூபாய் கடன் பெற்று இருக்கின்றான். கடனாக பெற்ற 5,000 ரூபாயில் 2,000 ரூபாயை திருப்பி தந்த மனோஜ்குமார், 3,000 ரூபாயை திருப்பி தராமல் இருந்து வந்து உள்ளான். இதனை மனோஜ்குமாரின் தாயாரிடம் நந்தினி, ராதாமணி இருவர் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ்குமார், நந்தினி, ராதாமணியை தேடி, அவர்கள் தங்கி இருந்த மருதம்மாள் வீட்டிற்கு சென்றான். அப்போது தகாத வார்த்தைகளால் பேசி மருதம்மாள், ராதாமணி, நந்தினி உள்ளிட்ட மூவரிடம் சண்டை இட்டிருக்கின்றான். வாக்குவாதம் முற்றிப் போகவே, முள் கட்டையை எடுத்து மூன்று பெண்களையும் கடுமையாக தாக்கினான். இதில் தலையில் பலத்த காயமடைந்த மூதாட்டி மருதம்மாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு விசாரணை ஐந்தாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக எஸ். மோகன்பிரபு ஆஜரானார். வாதம் பிரதி வாதம் நடந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ்குமாரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி பி.கே.சிவகுமார், குற்றவாளி மனோஜ்குமாருக்கு கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Next Story

