விநாயகர் சதுர்த்தி விழாவினை சிறப்பாக அமைதியான முறையில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடிட வேண்டும்

X
விநாயகர் சிலையை நிறுவ உள்ள அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் அரசு விதிகளுக்குட்பட்ட குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, விநாயகர் சிலை நிறுவ உள்ள இடத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச் சான்று, சிலை நிறுவ உள்ள இடம் அரசு இடமாக இருப்பின்
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை சிறப்பாக அமைதியான முறையில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடிட வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், வேண்டுகோள் பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று கடைபிடிக்க வேண்டிய அரசு விதிமுறைகள் குறித்து, விழாக்குழுவினருக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் இன்று (20.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தெரிவித்ததாவது: விநாயகர் சிலையை நிறுவ உள்ள அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் அரசு விதிகளுக்குட்பட்ட குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, விநாயகர் சிலை நிறுவ உள்ள இடத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச் சான்று, சிலை நிறுவ உள்ள இடம் அரசு இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறையிடமிருந்து தடையின்மை சான்று, நெடுஞ்சாலை மற்றும் வேறு துறையினர் எனில் சம்மந்தப்பட்டவரிடமிருந்து தடையின்மை சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடமிருந்து ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி, தற்காலிகமாக நிறுவப்பட உள்ள அமைப்பு தீ பாதுகாப்பு விதிகளின்படி அமைந்துள்ளது என தீயணைப்பு துறையினரின் சான்று, மின்சாரம் பெறப்படும் இடம் அல்லது தற்காலிக மின் இணைப்புக்கென தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடமிருந்து பெறப்பட்ட கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். வழங்கும் ஆவணங்கள் அனைத்தும் முறையாக பரிசீலனை செய்யப்பட்ட பின் அனுமதி வழங்கப்படும். நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள சிலையானது தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இரசாயன வர்ணம் பூசப்பட்ட மற்றும் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் (Plaster of Paris) மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. தடை செய்யப்பட்ட இரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மேலும் நீரில் கரையக்கூடிய மற்றும் நச்சுத் தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்திட வேண்டும். நச்சு மற்றும் மக்காத இரசாயனங்களை கொண்டு சிலைகள் செய்யக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு தற்காலிக அமைப்புகள் ஏற்படுத்துவதை தவிர்த்திட வேண்டும். உள்ளே செல்வதற்கும் மற்றும் வெளியே வருவதற்கும் அகலமான வழிகள் ஏற்படுத்திட வேண்டும். மேற்படி சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தில் தேவையான முதலுதவி மருத்துவ வசதிகள் இருப்பதை சம்மந்தப்பட்ட அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மேற்படி வழிபாட்டு தளங்களில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை சேமித்து வைப்பதை தடை செய்ய வேண்டும். நிறுவப்பட உள்ள சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர வழிபாட்டு தலங்கள்/ மருத்துவமனைகள் / கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்கப்பட வேண்டும். பூஜை நேரங்களில் காலை இரண்டு மணி நேரமும், மாலை இரண்டு மணி நேரமும் மட்டும் மைக் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது. பாக்ஸ் வடிவ ஒலிப்பெருக்கியை மட்டும் பயன்படுத்த வேண்டும். மேலும் ஒலிப்பெருக்கியின் மூலம் வெளியாகும் சப்தம் மற்றும் இசைப்பாடல்கள் அதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள டெசிபலுக்கு மிகையாக கூடாது. விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின் பேரில் சட்டத்திற்கு புறம்பான செயல்களை அமைப்பாளர்கள் அனுமதிக்க கூடாது. மேற்படி நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவோ, சமுதாய கட்சி தலைவர்களுக்கு ஆதரவாகவோ பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது. சிலையின் பாதுகாப்பிற்காக இரண்டு தன்னார்வ தொண்டர்களை 24 மணிநேரமும் பணியில் அமர்த்த வேண்டும். சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் மின் விளக்குகளால் வெளிச்சமாக இருக்க வேண்டும். மின் நிறுத்த நேரங்களில் ஜெனரேட்டர் செட் பயன்படுத்த வேண்டும். சாதீய வெறுப்புகளை தூண்டக்கூடிய முழக்கங்களை எழுப்பக்கூடாது என்றும், மற்றும் எக்காரணத்தை கொண்டும் மத அடிப்படையிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் பிற மதத்தினரின் மனதை புண்படுத்திடும்படியான செயல்களை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க கூடாது. பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு மத நல்லிணக்கம் பாதுகாப்பது தொடர்பாக வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களால் விதிக்கப்படும் நிபந்தனைகளை அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்படும் இடங்களில் மட்டும் சிலைகள் கரைக்கப்பட வேண்டும். பொது இடங்களில் வழிபாட்டிற்காக நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 05 நாட்களுக்குள் சிலைகளை கரைப்பதற்காக எடுத்து செல்ல வேண்டும். விநாயகர் சிலை கரைப்பதற்கான வாகன ஊர்வலம் காவல் துறையினரால் அனுமதி அளிக்கப்பட்ட வழித்தடங்களில் குறிப்பிட்ட நாளில் பகல் 12 மணிக்குள் நடத்தப்பட வேண்டும் மற்றும் முறையான அனுமதியளிக்கப்பட்ட இடத்தில் கரைக்கப்பட வேண்டும். மினி லாரி, டிராக்டர்களில் மட்டுமே மேற்படி விநாயகர் சிலைகளை ஏற்றி செல்ல பயன்படுத்த வேண்டும். மாட்டு வண்டி, மீன்பாடி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. விநாயகர் சிலையை ஏற்றி வரும் வாகனங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 1988ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்திற்கு ஏற்றவாறே இருக்க வேண்டும். விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடங்கள், கரைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் மேல் சாத்தப்பட்ட பேப்பர் மற்றும் பிளாஸ்டிக்காலான பூக்கள், துணிகள்,அலங்கார பொருட்கள் ஆகியவைகளை சிலைகள் கரைக்கும் முன்பே அகற்றிட வேண்டும். மக்கும் , மக்காத பொருட்களை தனித்தனியே சேகரிக்கப்பட வேண்டும். சிலைகள் கரைக்கப்படக் கூடிய இடங்களில் தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் சிலைகள் கரைக்க கூடிய இடத்தின் அடியில் செயற்கையிலான தரைப்பகுதி அமைக்கப்படவேண்டும். விநாயகர் சிலைகளை நீரில் கரைத்த 48 மணி நேரத்திற்குள் நீர்நிலைகளில் சிலைகளுடன் கொண்டு வரப்பட்ட பொருட்கள் நகராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மேற்பார்வையில் சுத்தமாக அகற்றப்பட வேண்டும். மேற்சொன்ன அரசு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட விழாக்குழுவினர், பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் கோபாலசந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சக்திவேல், சுற்றுச்சூழல் மாவட்ட பொறியாளர் விஜயலட்சுமி, துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் விநாயகர் சிலை நிறுவ உள்ள அமைப்பாளர்கள், விழாக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்
Next Story

