'கூலி' திரைப்படம் குறித்த வழக்கை அவசரமாக விசாரிக்க என்ன அவசியம்? - நீதிபதி காட்டம்

கூலி திரைப்படம் குறித்த வழக்கை அவசரமாக விசாரிக்க என்ன அவசியம்? - நீதிபதி காட்டம்
X
கூலி திரைப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்சார் போர்ட் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 171 வது படமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி தற்போது உலகெங்கும் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமீர் கான், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முழுக்க, முழுக்க சண்டை காட்சிகளை மையமாக வைத்து கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி படம் உலக அளவில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில், கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 30 ஆண்டுகளுக்களும் மேலாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், தற்போது கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 400 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவதால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், கூலி திரைப்படத்துக்கு அளிக்கப்பட்ட A சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "குடும்பத்துடன் திரையரங்குக்கு வருபவர்கள் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் படம் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், குடும்பத்தில் ஒருவர் படத்தை பார்க்காமல் குழந்தைகளுடன் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே A சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். அதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கூலி படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கை அவசரமாக விசாரிக்க என்ன உள்ளது? படம் வெளியாகி நீண்ட நாட்கள் கடந்த நிலையில் தற்போது வழக்கு தொடர்ந்தது ஏன்? என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
Next Story