விவசாயிகள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், தகவல்

X
விவசாயிகள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், தகவல். பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சாகுபடி செய்யப்படும் காரீப் பருவத்தில் நடவு செய்யப்படும் வாழை, மரவள்ளி, சின்ன வெங்காயம், மஞ்சள் மற்றும் தக்காளி பயிருக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்க செய்து அவர்களை நிலைபெற செய்யவும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. காரீப் பருவத்தில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி பயிருக்கு வருகிற செப்டம்பர் 1-ம் தேதிக்குள்ளும் மற்றும் வாழை, மரவள்ளி, மஞ்சள் பயிர்களுக்கு செப்டம்பர் 16-ம் தேதிக்குள்ளும் பயிர் காப்பீடு செய்துக்கொள்ளலாம். எனவே அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டு தொகையை பெற்று பயன்பெறலாம். சின்ன வெங்காய பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2,128, தக்காளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.915, வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3576, மரவள்ளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1335, மஞ்சள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3711, பிரீமியம் தொகை பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் சின்ன வெங்காய பயிருக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கொளக்காநத்தம், செட்டிக்குளம், பெரம்பலூர், குரும்பலூர், பசும்பலூர், வாலிகண்டாபுரம், வெங்கலம் மற்றும் கீழப்புலியூர் குறுவட்டாரத்தில் அடங்கியுள்ள கிராமங்களிலும், தக்காளி பயிருக்கு கூத்தூர் குறுவட்ட கிராமங்களிலும், வாழை பயிருக்கு பெரம்பலூர், குரும்பலூர் மற்றும் வெங்கலம் குறுவட்டார கிராமங்களிலும், மரவள்ளி பயிருக்கு கூத்தூர், பெரம்பலூர், குரும்பலூர் மற்றும் கீழப்புலியூர் குறுவட்டார கிராமங்களிலும், மஞ்சள் பயிருக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பெரம்பலூர், குரும்பலூர், பசும்பலூர், வாலிகண்டபுரம், வெங்கலம் மற்றும் கீழப்புலியூர் குறுவட்டார கிராமங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, சிட்டா, நடப்பு பருவ அடங்கல், சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்தவற்கு உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story

