அரசுப்பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் :எம்.பி. அறிவுறுத்தல்

அரசுப்பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் :எம்.பி. அறிவுறுத்தல்
X
அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் : கனிமொழி எம்.பி. அறிவுறுத்தல்
பள்ளி மாணவர்-மாணவியரின் நலனுக்காக அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என, கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் ஊராட்சிக்கு நாள்தோறும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காமநாயக்கன்பட்டி, சால்நாயக்கன்பட்டி, அச்சன்குளம், கோவிந்தன்பட்டி, தெற்கு தீத்தாம்பட்டி, பசுவந்தனை, வடக்கு கைலாசபுரம், தெற்கு கைலாசபுரம் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு காலை நேரத்தில் செல்லும் பேருந்தில் மாணவர்-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 22) வெகுநேரமாகியும் பேருந்து வராததால், மாணவர்கள் பல கிலோமீட்டர் நடந்து பள்ளிகளுக்குச் செல்ல நேரிட்டதாம். வழக்கமாக செல்லும் அரசுப் பேருந்து, பழுது காரணமாக இயக்கப்படவில்லை என கோவில்பட்டி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையினர் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, காலையும், மாலையும் பள்ளி நேரங்களில் அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என, மாணவர்களும், பொதுமக்களும் தமிழ்நாடு அரசுக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும் கோரிக்கை வைத்தனர். இதையறிந்த திமுக துணைப் பொதுச் செயலரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, கோவில்பட்டி அரசுப் போக்குவரத்துப் பணிமனை அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது, மாணவர்-மாணவியரின் நலன்கருதி பேருந்களை முறையாகவும், சிறிது நேரம் முன்னதாகவும் இயக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இனி இத்தகைய பிரச்னை ஏற்படாது என, அவரிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
Next Story