ஊழல் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை : கி. வீரமணி

X
பாஜகவினர் மீது பல ஊழல் புகார்கள் உள்ள நிலையில், அது பற்றி பேச அக்கட்சியினருக்கு தகுதி இல்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது: திமுகவை வேரோடு பிடுங்கி எறியலாம் என அமித்ஷா போன்றோர் கனவு காணுகின்றனர். ஆனால், திமுகவின் வேர் எங்கே இருக்கிறது என்பதை பாஜகவினரால் கண்டுபிடிக்கவோ, தொடவோ முடியாது. இந்த வேர் மண்ணில் அல்ல; மக்களிடத்தில் உள்ளதே இதற்கு காரணம். உலகம் முழுவதும் பெரியார் மற்றும் திராவிடத்தின் கருத்துகள் மிகத் தெளிவாக இருக்கிறது. மக்கள் வாக்கை மட்டுமே நம்பி நாங்கள் உள்ளோம். மக்களிடம் வித்தைகளைக் காட்டி இறங்கினால், அதற்குக் கூட தமிழ்நாட்டில் இடம் கிடையாது. தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு ஏற்கெனவே அவர்களது கூட்டணியில் இருந்த ஒருவர் விலகிச் சென்றார். திமுக கூட்டணியில் வந்து சேருவதற்கு நிறைய பேர் வரிசையில் நிற்கின்றனர். ஆனால், பாஜக கூட்டணியில் இருந்தவர்களும் விலகுவதால், காலியாகும் நிலை உள்ளது. அதிமுகவில் கொள்கை தெரிந்தவர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர். பாஜக ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு தேர்தல் பத்திரத்தை வாங்கியுள்ளது. இதுபோல, வியாபம் ஊழல் உள்பட பல புகார்கள் பாஜகவினர் மீது உள்ளது. எனவே, ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஊழல் பிரசாரம் என்பது அவதூறின் உச்சக்கட்டம். யாரை பார்த்தாலும் ஊழல், ஊழல் என சொல்லும் அளவுக்கு வந்துள்ளனர். பாஜகவினர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பட்டியல் உள்ளது. இது போக, போக வெளியில் தெரிய வரும்"என்றார்.
Next Story

