பேராவூரணி அருகே அஞ்சல்துறை சேமிப்புக் கணக்கில் பல லட்சம் ரூபாய் மோசடி... உரிய நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார்

X
பேராவூரணி அருகே அஞ்சல் துறை சேமிப்புக் கணக்கில் பணம் கட்டியவர்களின் பணம் திருப்பி தரப்படாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அஞ்சல் அலுவலர்களிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கரம்பக்காடு துணை அஞ்சல் நிலையத்தில் மருங்கப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.பாஸ்கர் என்பவர் பணியில் இருந்த போது, 01.06.2023 க்கு முன்பாக சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்திய அப்பாவி பொதுமக்களின் பணம் பல லட்சம் ரூபாயை மோசடி செய்ததாகவும், தங்கள் பணத்தை திரும்பத் தரவேண்டும் என அஞ்சல் உயர் அலுவலர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பட்டுக்கோட்டை அஞ்சலக பொறுப்பாளர் ஜெயக்குமார், ஐ.பி ஹரிஷ், தற்போதைய போஸ்ட் மாஸ்டர் சுதா, போஸ்ட்மேன் ஐயப்பன் ஆகியோர் கரம்பக்காடு கிராமத்திற்கு வந்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி, பொதுமக்கள் வைத்திருந்த அஞ்சலக பாஸ்புக்கை வாங்கிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு பணம் திரும்பக் கொடுத்து விட்டதாகவும், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், பணம் திரும்பக் கிடைக்காத பாதிக்கப்பட்ட மக்கள் முன்னாள் போஸ்டர் பாஸ்கரிடம் சென்று கேட்டபோது, "தான் கையாடல் செய்த ரூபாய் 8 லட்சத்து 50 ஆயிரத்தை, தலைமை தபால் நிலையத்தில் கட்டி விட்டேன். தற்போது நான் பணியில் இல்லை" என்று கூறியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் பட்டுக்கோட்டை அஞ்சலக ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது, "உங்களுடைய பாஸ்புக் எங்களிடம் இல்லை" என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை அஞ்சல் ஆய்வாளரிடம் 26.03.2025 அன்று பாதிக்கப்பட்ட மக்கள் மனு கொடுத்துள்ளனர். தொடர்ந்து, கடந்த 22.04.2025, 24.04.2025 ஆகிய இரு நாட்கள் குருவிக்கரம்பை அஞ்சல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. ஆனால் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி குருவிக்கரம்பையில் நடைபெற்ற, "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தமிழக மக்கள் புரட்சிக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.வி.முனியன் தலைமையில், அங்கு வந்திருந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் ஆகியோரிடம் மனு அளித்து தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அப்பொழுதே கரம்பக்காடு துணை அஞ்சல் நிலையம் சென்று, அங்கிருந்த அஞ்சல் அலுவலரிடமும், தொலைபேசி மூலம் உயர் அலுவலர்களிடம் பேசி, "பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு" வலியுறுத்தினார். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தாங்கள் பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து கே.வி.முனியன் கூறுகையில், "ரூ.5,000 முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை பல்வேறு நபர்களிடம மோசடி நடைபெற்றுள்ளது. எவ்வளவு என அலுவலர்கள் விசாரணையில் தெரிய வந்தாலும், எதையும் வெளிப்படுத்தவில்லை. எனவே, எங்களுடைய பணத்தை திரும்பத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை" என்றார்.
Next Story

