அமித் ஷாவின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்: தமிழக பாஜக வலியுறுத்தல்

X
இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை பூத் கமிட்டி மாநாட்டில் அமித் ஷா, தமிழகத்தில் ஊழல் ஆட்சியை ஒழிப்பேன் என்றவுடன் மக்கள் விரோத அரசியல் சகுனிகளின் அலறல் சத்தங்களும், ஊழல் அமைச்சர்களின் உளறல் பேச்சுகளும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. உலகத்திலே ஊழல் நிறைந்த கட்சியும், ஆட்சியும் திமுக தான் என்பதை வலியோடும், வேதனையோடும், தமிழகத்துக்கு லட்சக்கணக்கான கோடி திட்டங்கள் அளித்தும் மக்களை சென்றடையவில்லையே என்ற ஆதங்கத்துடன் அமித் ஷா பேசியுள்ளார். எட்டு மாதங்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி போன்றவர்கள் இனி எதிர்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இடம்பெற முடியாது. இடம்பெறக்கூடாது. ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஆட்சி செய்ய அதிகாரத்தை வழங்க முடியாது என்று 130-வது சட்ட திருத்த மசோதாவை குறிப்பிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் யாரை காப்பாற்றுவதற்கு கருப்பு மசோதா என்று கூறுகிறார்? என்று தெளிவாக கேள்வியோடு குறிப்பிட்டு அமித் ஷா பேசினார். முதல்வர் ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் வலுவாக உள்ளது. பிரதமர் மோடி வழிகாட்டுதலில், தமிழகத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடைய அரசியல் நெறியில் 2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என கூறப்பட்டுள்ளது.
Next Story

