அனுமதியின்றி மண் கொண்டுசென்ற டிப்பர் லாரி பறிமுதல்!

அனுமதியின்றி மண் கொண்டுசென்ற டிப்பர் லாரி பறிமுதல்!
X
கோவில்பட்டியில் அனுமதி சீட்டு இன்றி சரள்மண் கொண்டுசென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரைக் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுரோடு சந்திப்பு வழியாக வந்த டிப்பர் லாரியை அந்தப் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் நிறுத்தி கோவில்பட்டி நகருக்குள் செல்லக் கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால், அந்த லாரி கோவில்பட்டிக்குள் சென்றது. இதுகுறித்து கோவில்பட்டி சந்திப்பு காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்திப்பு வழியாகச் சென்ற அந்த லாரி சாலை விதிகளை மதிக்காமல் கடந்து சென்றதை கண்ட போலீசார், போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் (பொ) பொன்ராஜ§க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, எஸ்.ஐ. பொன்ராஜ் அந்த டிப்பர் லாரியை விரட்டிச் சென்று கோவில்பட்டி- எட்டையாபுரம் சாலையில் மந்தித்தோப்பு சாலை விளக்கு அருகே மடக்கிப் பிடித்து சோதனையிட்டார். அப்போது லாரியில் அனுமதிச் சீட்டின்றி 6 யூனிட் சரள்மண் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டிரைவரிடம் விசாரித்ததில் அவர், இளம்புவனத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் அஜய் ராகுல் (19) என்பதும், டிரைவர் உரிமம் பெறாமல் லாரியை ஓட்டிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் பொன்ராஜ் அளித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, டிரைவர் அஜய் ராகுலைக் கைது செய்து, சரள்மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்தனர். அத்துடன் டிரைவருடன் வந்த 17 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி, லாரி உரிமையாளரான பரமக்குடியைச் சேர்ந்த முத்தரசு மீதும் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனர்.
Next Story