காதொலிக் கருவி கேட்டு மனு கொடுத்த மாற்றுத்திறனாளி - உடனடியாக நடவடிக்கை எடுத்து கருவி வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ்
காதொலிக் கருவி கேட்டு மனு கொடுத்த மாற்றுத்திறனாளி - உடனடியாக நடவடிக்கை எடுத்து கருவி வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (25.08.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். 4 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.13,140 மதிப்பிலான காதொலி கருவிகளையும், தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், நிதி ஆதரவு திட்டத்தின் மூலம் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.24,000 வீதம் நிதி ஆதரவிற்கான ஆணையினையும், வருவாய்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாற்றத்திற்கான ஆணை மற்றும் ஒரு பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணையினையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.4,40,000 மதிப்பில் இலவச வீடு கட்டுவற்கான ஆணைகளையும் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.6,03,140 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெறுவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 375 மனுக்கள் பெறப்பட்டது. தொழிலாளர் நலத்துறை மூலமாக வீடு கட்டுவதற்காக ஆணை பெற்ற பயனாளி திருமதி சுசீலா என்பவர், தான் 3 குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருவதாகவும், இதனால் மழைக்காலம் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும், தமிழக அரசின் மூலம் வீடு கட்டுவதற்கு உதவி வேண்டி கடந்த மூன்று வருடங்களாக முயற்சி செய்து வருவதாகவும், தற்போது வீடு கட்டுவதற்கான ஆணை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டது மிகவும் சந்தோஷமாக உள்ளது என தெரிவித்தார். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம், மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருவது மிகவும் உதவிகரமாக உள்ளது. இதனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். காதொலிக்கருவி வேண்டி மனு கொடுத்த மாற்றுத்திறனாளி முதியவருக்கு உடனடி நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் காதொலி கருவியினை வழங்கினார். காதொலிக்கருவி பெற்றுக்கொண்ட திருமதி இந்திராணி என்பவர், தனக்கு கடந்த 10 வருடங்களாக காது கேட்காமல் இருந்து வந்ததாகவும், காதொலிக்கருவி வாங்குவதற்கு வசதி இல்லை எனவும், அரசாங்கத்தால் கருவி வழங்கப்படுவதை அறிந்து இன்று விண்ணப்பிக்க வந்தேன், கலெக்டரிடம் மனு கொடுத்த 15 நிமிடத்திலேயே எனக்கு காதொலிக்கருவியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். உடனடி நடவடிக்கை எடுத்து எனக்கு காதொலிக்கருவி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் திரு.வீ.வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.சக்திவேல், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) மு.பாஸ்கரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






