இணைய வழி குற்றச் செயல்கள் அதிகரிப்பு, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 

இணைய வழி குற்றச் செயல்கள் அதிகரிப்பு, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 
X
இணைய வழி குற்றச் செயல்கள்
தஞ்சை மாவட்டத்தில், 8 மாதங்களில் சைபர் குற்றங்கள் மூலம் ரூ.20 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 2,073 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது  இன்றைய காலங்களில் சைபர் கிரைம் எனப்படும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தஞ்சை மாவட்டத்திலும் அதிக அளவில் சைபர்கிரைம் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த 23-ஆம் தேதி வரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 2,073 வழக்குகள் இணையவழி மூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 33 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், அவ்வழக்குகளில் தொடர்புடைய டெல்லியை சேர்ந்த 9 குற்றவாளிகள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இழந்த தொகை ரூ.19 கோடியே 96 லட்சத்து 52 ஆயிரத்து 950 ஆகும்.  இதில் சம்மந்தப்பட்ட வங்கிகளில் பாதிக்கப்பட்டவர்களின் தொகை ரூ.90 லட்சத்து 40 ஆயிரத்து 343 நிறுத்தி வைக்கப்பட்டது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த தொகையில் ரூ.58 லட்சத்து 45 ஆயிரத்து 29 துரித நடவடிக்கையின் காரணமாகவும், நீதிமன்ற உத்தரவின்படியும் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கே திரும்ப வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகளவில் வயதானவர்களை (முத்த குடிமக்களை) குறிவைத்து ஏமாற்றும் நபர்கள் சி.பி.ஐ. அலுவலர்கள் போல் தொடர்பு கொண்டு தங்களின் ஆதார் கார்டை பயன்படுத்தி பெறப்பட்ட சிம்கார்டின் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.  மேலும் அவர்களின் வங்கிக்கணக்கை பயன்படுத்தி, ஹவாலா பணமோசடி நடைபெற்றுள்ளதாகவும் அதனால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்கள் சொல்லும் பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு பணத்தை அனுப்பவேண்டும் என்று சொல்லி அதிகளவில் ஏமாற்றி வருகின்றனர். இதில் கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை பகுதிகளை சேர்ந்த உயர் பதவிகளில் இருப்பவர்கள், ஓய்வுபெற்றவர்களே அதிகளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர். மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வந்திருப்பதாக கூறி ஏமாற்றுவது, வங்கிக் கணக்கின் ஆவணங்களை மறு ஆய்வு செய்தல் என்ற பெயரில் அப்டேட் செய்ய வைத்து விவரங்களை பெற்று மோசடியில் ஈடுபடுன்றனர். டெலிகிராம் மூலம் போலியான வர்த்தக தவல்களை பதிவிறக்கம் செய்ய வைத்து பணத்தை முதலீடு செய்தால் 500 சதவீதம் லாபம் பெறலாம் என கூறி ஏமாற்றுவது, வாட்சப் மற்றும் பேஸ்புக் டி.பி. -யில் உள்ள புகைப்படத்தை எடுத்து ஆபாச படமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என கூறி மிரட்டுவது மற்றும் வெளியீடுவது போன்ற மோசடிகள் பரவலாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" இவ்வாறு சைபர் கிரைம் காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story