ரவுடிகளை, குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார்

X
செங்கல்பட்டு மாவட்டம்,திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலி கிராமத்தில் உள்ள பீப் குடோனில், அஸ்கர் அலி என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை 25ம் தேதி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, லஷ்மி நகர் அப்துல் ரகுமான் என்கிற ரகுமான், 31, பெரியநகர் நகர் முஜாகித், 23, ஆகியோர் இங்கு சென்று, முன்விரோதம் காரணமாக அஸ்கர் அலியிடம் தகராறு செய்தனர். அதன் பின், அஸ்கர் அலியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்துல் ரகுமான், முஜாகித் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இதில், அப்துல் ரகுமான் மீது இரண்டு கொலை, கொலை முயற்சி, கொள்ளை வழக்கு, பெண் பாலியல் பலாத்காரம் என, பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. முஜாகித் மீது கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு, எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரை செய்தார். இதையேற்று அப்துல் ரகுமான், முஜாகித் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க, கலெக்டர் சினேகா, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன் பின், சென்னை புழல் சிறையில் உள்ள இருவரிடமும், குண்டர் சட்ட நகலை, போலீசார் நேற்று வழங்கினர்.
Next Story

