மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கி வைப்பு

X
அரியலூர், ஆக.26 அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட நிர்வாகம் சார்பில், 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனி நபர்களுக்கு விளையாட்டுகளை முழு திறனுடன் அணுகவும் , உயர்மட்ட போட்டிகளில் பங்குபெற்று சிறப்படையவும் வாய்ப்புகளை வழங்கி வரும் தமிழக அரசு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலனின் மேம்பாட்டில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பல்வேறு திட்டங்களுக்கும் தொடர்ந்து நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் ஹாக்கி விளையாட்டில் சிறந்த மாவட்டமாக அரியலூர் விளையாட்டு அரங்கம் திகழ்கிறது. இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்திக் வீட்டுக்கே சென்று வீடு வழங்குவதற்கான ஆணையை வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி வெவ்வேறு புதிய விளையாட்டுப் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.37 கோடி வழங்கப்படுகின்றது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். இது தவிர கடந்தாண்டு 83 வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. உடல்நலனை பாதுகாப்பதில் விளையாட்டு போட்டிகள் முக்கிய பங்கு வகிப்பதால், மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போலவே விளையாட்டுப் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் . மாநில, தேசிய மற்றும் உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெறவேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொ)பாலசுப்ரமணியம், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன் மற்றும் மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

